லாரியில் ரகசிய அறை அமைத்து, ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு 330 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தனிப்படை போலீஸார் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், டீசல் டேங்க் அருகில் ரகசிய அறை அமைத்து, 330 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த வர்களை போலீஸார் பிடித்தனர்.
தகவலறிந்து வந்த எஸ்.பி. ஆசிஷ் ராவத், ஏடிஎஸ்பி சஹனாஸ் இலியாஸ், டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, விசாரணை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள அனகப்பள்ளி பகுதியில் இருந்து லாரியில் கஞ்சாவை ஏற்றிக்கொண்டு வந்த இவர்கள், வழியில் லாரியில் போலி பதிவு எண்களை மாற்றி மாற்றி பொருத்தி வந்துள்ளனர்.
பின்னர், முடச்சிக்காடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து, சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவுடன், லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊத்துமலை பெரமராஜ்(34), கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பேராவூரணி காரங்குடா அண்ணாதுரை(44), கஞ்சாவை பதுக்கி வைக்க உதவிய அம்மணிசத்திரம் முத்தையா(60) ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படவிருந்த 3 ஃபைபர் படகுகளைக் கைப்பற்றிய போலீஸார், கஞ்சா கடத்தலில் முக்கியப் பங்கு வகித்த தஞ்சாவூர் விளார் சாலை பகுதியைச் சேர்ந்த கருப்பையா(52) என்பவரை தேடி வருகின்றனர்.