தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும், ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
பெரும்பாலும், விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில், சிறப்பாக கட்சி பணி செய்தோருக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி மாவட்டச் செயலாளர் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, ஜனவரி முதல் வாரத்தில், தவெக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் எனவும், 100 மாவட்டங்களாகப் பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் எந்தத் தொகுதி எந்த மாவட்டத்தில் இடம் பெற வேண்டும் என்ற பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.