மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசியல் தலைமைத்துவம் வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் கிடையாது

10 0

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. அனைவரும் எதிர்பார்க்கும் புதிய மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது. அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்கள் சக்தி தான் பலமிக்கதாகவுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) அமைச்சின் கடமைகளை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகள் ஆகியோருடன் ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடினார்.
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அரசியலமைப்பின் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் காணப்பட்டாலும் மக்களின் அதிகாரம் தான் பலமிக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கின்றன.

இந்த மாற்றம் அவர்களினது எதிர்பார்ப்பு என்பது அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 80 சதவீத ஆணையை எடுத்துக்காட்டுகின்றனது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமது அரசாங்கத்துக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்தவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்த புதிய மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அரச சேவை இன்றியமையாததாக காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்த, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா,

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு படை உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.