ஜனாதிபதி அநுர குமாரவின் கொள்கை பிரகடனம் சிறந்தது – ரோஹித அபேகுணவர்தன

9 0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம் சிறந்தது. சிறந்த திட்டங்களை செயற்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசியலில் நெடுநாள் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

களுத்துறை மாவட்ட மக்களுக்கு இயலுமான வகையில் சேவையாற்றியுள்ளேன். மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளதால் சவால்மிக்க தருணத்திலும் மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள். எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம் சிறந்தது. நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்களை முன்வைத்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எனது சகோதரர் போன்றவர். எதிர்க்கட்சியாக செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளோம். ஆட்சியில் இருப்பதும், எதிர்க்கட்சியில் இருப்பதும் எமக்கு புதியதொரு விடயமல்ல.

கட்சி என்ற ரீதியில் வேறுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் நாட்டுக்காக கைகோர்த்த நாங்கள் எமது அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவது பாரியதொரு விடயமல்ல. அரசியலில் நெடுநாள் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.