இனவாத, பிரிவினைவாத கருத்துக்களை நாம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை – விமலுக்கு கனடியத் தமிழர் பேரவை பதில்

15 0

இன, மதவாதக் கருத்துக்களை தெரிவித்து மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் குமார் இரத்தினம் தெரிவித்துள்ளார்.

நாம் ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினைவாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று விமல் வீரவன்ச அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு கனடிய தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டியே விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினை வாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுடன் நீதி மற்றும் நியாயமான தீர்வுகளை முன்வைத்தே அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு சமூகத்தில் இணைந்து வாழ முடியும் என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக, இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் கருத்துக்கள் மக்களின் உணர்ச்சிகளைக் கையாளவும், சமூகங்களைப் பிளவுபடுத்தவும், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்யவும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த தந்திரோபாயம் காலகாலமாக தவறான புரிதல்களை நிலைநிறுத்தியுள்ளது என்பதோடு அவநம்பிக்கையை வளர்த்து, இலங்கையின் சமூக மற்றும் கலாசார ஒற்றுமைக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்ற சொல்லாடல்கள் பல அரசியல்வாதிகளால் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்தப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அனைவரும் அறிவர். இதுபோன்ற வார்த்தைகள் மக்களின் உணர்வுகளைத்தூண்டி இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி தங்கள் அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளவே பலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற கருத்துக்களால் எந்த சாதாரண குடிமகனுக்கும் எந்த நன்மையையும் எப்பொழுதும் நேர்ந்ததில்லை. மாறாக சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஆழமாக்கி உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி அர்த்தமுள்ள முன்னேற்றங்களை தடுக்கின்றது. இனியும் இவ்வாறான கருத்தாடல்களால் மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம்.

கனடிய தமிழர் பேரவையினால் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த இனவாத தேசியவாத கருத்துக்களும் இல்லை என்பதையும் அவை நியாயமான, தசாப்தங்களாக தமிழ் மக்களால் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வாகவே அமைந்துள்ளது என்பதையும் நிலைநாட்டவிரும்புகின்றோம்.

உதாரணமாக,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல்:

இந்தச் சட்டம் தமிழ் சமூகங்களுக்கு மட்டுமன்றி சிங்கள தனிநபர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தவறான பயன்பாடு தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் வழிவகுத்தது, அதை ரத்து செய்வது அனைவருக்கும் நீதியை நோக்கிய ஒரு அவசியமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும்.

அரசியல் கைதிகளை விடுவித்தல்:

பல நபர்கள் விசாரணையின்றி பல ஆண்டுகளாக தடுப்புக்காவலில் உள்ளனர். நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் சட்டத்தின் கீழ் நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் விடுதலை அவசியமாகும்.

காணி உரிமைகள்:

வடக்கு மற்றும் கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடமே கையளிப்பது என்பது சரியான உரிமையை மீட்டெடுப்பதோடு இடம்பெயர்ந்த குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் உதவும். தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சட்ட ரீதியாக அவர்களிற்கு உரிமையான காணிகளை திரும்பக்கோருதல் அவர்களின் உரிமை என்றே கருதப்பட வேண்டும்.

கலாசார மற்றும் மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாத்தல்:

புனித தளங்கள் மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாப்பது அனைத்து சமூகங்களின் அடையாளத்தை பாதுகாக்க மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்கான முக்கியமான செயற்பாடாகும்.

பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்:

13ஆவது திருத்தம் போன்ற தற்போதைய அரசியலமைப்பு விதிகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள பிராந்திய நிர்வாகத்திற்காக வாதிடுவது சமமான நிர்வாகத்தை நோக்கிய ஒரு படியாகும் அன்றி அது பிரிவினைவாதம் அல்ல.

இங்கு குறிப்பிடப்பட்டவை எவையும் பிரிவினைக்கான அல்லது இனவாதத்திற்கான கோரிக்கைகள் அல்ல. அவை உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்திற்கான அழைப்புகள். ஒரு தேசத்தின் பலம் அதன் அனைத்து குடிமக்களின் கவலைகளையும் நியாயமாக அங்கீகரித்து நிவர்த்தி செய்யும் திறனில் உள்ளது.

நியாயமான கோரிக்கைகளை மௌனமாக்குவதற்கும் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துவதற்கும் பிரிவினைவாத, இனவாத முத்திரைகளும் குற்றச்சாட்டுகளும் பயன்படுத்தப்பட்ட கடந்த காலத்தின் அழிவுகரமான விளையாட்டுகளுக்கு அப்பால் நாம் நகர்வது இன்றியமையாதது.

இத்தகைய அணுகுமுறைகள் நீடித்த துன்பத்தையும் தாமதமான முன்னேற்றத்தையும் மட்டுமே தருகின்றன.

இனவாதம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் உத்திகள் சமூகத்திற்குள் விரிசல்களை ஆழப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

மேலும் இந்த தந்திரோபாயங்களுக்கு அப்பால் செல்ல வேண்டிய நேரம் இது. அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நடைமுறை தீர்வுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இது.