ஊழல், மோசடிகளிலும் நான் ஈடுபடவில்லை : ஒருபோதும் ஓடி ஒளிய மாட்டேன்

9 0

பாரதூரமான சவாலை எதிர்கொண்ட போது நாம் நாட்டை கைவிட்டு தப்பியோடவில்லை. அதேபோன்று இவ்வாறான சவால்களைக் கண்டும் ஓடப்போவதுமில்லை. இதுவரையில் எவ்வித ஊழல், மோசடிகளிலும் நான் ஈடுபடவில்லை என்பதால் எவ்வித அச்சமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (22) குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையான போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மருந்து பிரச்சினைக்கு முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டியேற்படும் என்று நான் நம்பவில்லை. அமைச்சரவையில் நாளொன்றுக்கு சுமார் 70 பத்திரங்கள் வரை சமர்ப்பிக்கப்படும். அமைச்சுக்களின் செயலாளர்களாலேயே அவை தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்படும். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதனை சமர்ப்பித்த பின்னர் நிதி அமைச்சு அதற்கான பரிந்துரைகளை வழங்கும்.

எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து எமக்கு தெரிந்த தகவல்களை நாம் தெரிவிப்போம். எனது பொறுப்பின் கீழ் காணப்பட்ட அமைச்சுக்களின் விடயங்களுக்கு அப்பால் ஏனைய அமைச்சுக்களின் விடயங்கள் தொடர்பில் எனக்கு ஆழமாகத் தெரியாது. எவ்வாறிருப்பினும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு சிறந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அதேநேரம் நாமும் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டிருக்கின்றோம்.

நாடு வீழ்ச்சியடைந்திருந்த போது அதனைப் பொறுப்பேற்று மீளக் கட்டியெழுப்பினோம். எம்மால் அதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை திருத்திக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராவோம். பாரதூரமான சவாலை எதிர்கொண்ட போது நாம் நாட்டை கைவிட்டு தப்பி ஓடவில்லை. அதேபோன்று இவ்வாறான சவால்களைக் கண்டும் ஓடப்போவதுமில்லை.

ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசிய பட்டியலில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்தது. இது அவரது கட்சி என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே கட்சி ஆரம்பத்திலேயே முறையாக செயற்பட்டிருக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி டயானா கமகேவின் கட்சி என்பதால் தான் அவருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது. அவ்வாறானதொரு இணக்கப்பாடு ரவி கருணாநாயக்கவுடன் எட்டப்பட்டிருந்ததா என்பது எனக்கு தெரியாது.

நான் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்துள்ளேன். வெளியே தள்ளப்பட்டிருக்கின்றேன். ஆனால் மண்ணில் புகைப்படவில்லை. எனவே தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டெழ முயற்சிக்க வேண்டும். தற்போது பாராளுமன்றம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய அரசாங்கம் சிறப்பாக செயற்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். 15 வருட அரசியல் வாழ்வில் 8 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் எவ்வித ஊழல், மோசடிகளிலும் நான் ஈடுபடவில்லை. எனவே எனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்றார்.