ரணில் விக்கிரமசிங்க என்னை கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்கப்போவதில்லை

12 0

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக என்னை நியமித்ததற்கு ஐக்கிய தேசிய கட்சியின் 99 வீதமானவர்கள் ஆதரவு. கட்சியில் இருக்கும் ஒரு சிலர் இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர் என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அவரது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தலின்போது புதிய ஜனநாயக முன்னணி கட்சியில் போட்டியிட்ட கட்சிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே புதிய ஜனநாய முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு எனது பெயரை கட்சியின் செயலாளர் பிரேரித்திருந்தார். ஒப்பந்தம் தொடர்பில் தெரியாத ஒரு சிலரே இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கட்சியின் செயலாளர் சாமிலா பெரேரா சாதாரண ஒருவர் அல்ல. லலித் அத்துலத் முதலியின் நிழலாக இருந்து செயற்பட்ட அனுபவமுள்ள ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் வெறுமனே இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.

இடம்பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடுவதற்கு 4 கட்சிகள் இணக்கம் தெரிவித்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தில் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒரு ஆசனம் புதிய ஜனநாயக முன்னணியால் தேசியப்பட்டியலுக்கு பெயரிடப்பட்டிருக்கும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரமே எனது பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தமையிட்டு எமது கட்சி அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில், கடந்த பொதுத் தேர்தலில் எங்களுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. சில வேளை, இந்த தேசியப்பட்டியல் பதவிக்கு வேறு ஒருவரை செயலாளர் நியமித்திருந்தால், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கூட இல்லாமல் போயிருக்கும். அது தொடர்பில் இவர்கள் சிந்திப்பதில்லை.

அத்துடன் எனது இந்த நியமனத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியில் 99 வீதமானவர்கள் ஆதரவு. ஓரிருவரே இதனை விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அதேநேரம் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியும். அதனாலே அவர் எதுவும் கதைக்காமல் இருக்கிறார். ஒப்பந்தம் தொடர்பில் தெரியாத கட்சியின் தவிசாளரே எனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

தேசியப்பட்டியலுக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தலதா அத்துகோரலவை நியமிக்கவே தீர்மானித்திருந்ததாக அவர் தெரிவிக்கிறார். அவர் எப்படி இவ்வாறு  தெரிவிக்க முடியும். நான் இந்த கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் இருக்கும் சிரேஷ் உறுப்பினர். கட்சிக்காக பல அர்ப்பணிப்புக்களை செய்தவன். அத்துடன் எனது நியமனம் தொடர்பில் கட்சியின் செயற்குழுவில் அனுமதி பெறவில்லை என தெரிவிக்கின்றனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமக்கு கிடைத்த தேசியப்பட்டியலுக்கு ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் சென்றார். அவர் ஜனாதிபதியானதும் அவரின் இடத்துக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டார். அப்போது செயற்குழுவில் அனுமதி பெறப்பட்டதா என கேட்கிறேன்.

அத்துடன் எனது இந்த நியமனம் தொடர்பில் விசாரணை நடத்தி என்னை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகிறது. ஆனால், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை கட்சியில் இருந்து நீக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார். அந்தளவுக்கு அவருக்காக நான் எனது கழுத்தை நீட்டி இருக்கிறேன். எனக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரை சுற்றியிருக்கும் ஒரு சிலரே இந்த விடயத்தை பிரச்சினையாக்கி வருகின்றனர் என்றார்.