அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.2024

76 0

21.11.2024

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024.
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள் காலங்காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
                               தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழ விடுதலையையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வுரிமையையும் தமது உயர்வான, ஒரே இலட்சிய வேட்கைத்துடிப்பாக வரித்துக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையையும் வழிகாட்டுதலையும் உளமார ஏற்று, மனித வாழ்வின் அதி மேன்மைமிகு அர்ப்பணிப்பாகத் தம்முயிரையே ஈகம்செய்த ஈழத்தாயின் நேசக் குழந்தைகளான மாவீரர்களை நெஞ்சுருகி வணக்கம் செலுத்தும் எழுச்சிமிக்க மாவீரர் நாள், அண்மித்து வருவதை நாமறிவோம்.

தம்மைத்தாமே அரசாளுகை செய்யவல்ல, அத்தனை வல்லமைகளையும் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பூர்வீக இருப்பினை அழித்து, முன்னைத்தமிழ் வீரமரபின் அடையாளங்களை மறுத்து, பண்பாட்டியல்புகளைக் கூறுபோட்டு, தமிழர் தாய்நிலத்தினையும் அவர்தம் நிலைகொண்ட வாழ்வுரிமையையும் இனவெறி கொண்டு கொடூரமான முறைகளில் நசுக்கப்பட்டதன் விளைவாகத் தமிழினம் தமது விடுதலையுணர்த்தி முரசறைந்துகொண்ட புனிதப்பயணத்திலே தேசத்தின் காவலர்களாக, தங்கள் மூச்செறிந்து நிலையானவர்கள் மாவீரர்கள். தியாகங்களின் உச்சமாகத்திகழும் இப்புனிதர்களை, அவர்தம் வரலாற்று அடையாளச் சுவடுகளைத் தமிழினம், தமது ஒவ்வொரு அசைவுகளிலும் அள்ளிச் சுமப்பதானது வரலாற்றின் செல்நெறிக்கு ஆன்ம பலமூட்டுவதாகவே இருக்கின்றது.

தமக்கான தனித்துவமான வாழ்வின் செழிப்பிலே கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் செல்வங்களான பிள்ளைச் செல்வங்களைக் கட்டியணைத்து, ஆரத்தழுவி, ஆயிரம் கனவுகள் புடைசூழ, கரம்பிடித்து நடந்த தம் பிள்ளைச் செல்வங்களை, தமிழீழம் என்ற மாபெரும் இலட்சியத்தின் மகுடங்களாகப் பொதுவுடமை வாழ்வுக்கு உவந்தளித்து, வெற்றிக்களமாடும் போதெல்லாம் வேங்கையென் பிள்ளையெனப் புளகாங்கிதம் கொண்டும் மார்பிலே குண்டேந்தி மண்ணை முத்தமிடும்போது, ஆன்மாவை உணர்வுகளால் உரமேற்றி, மீண்டும் மீண்டும் தம்மாலான தேசக்கடமையாற்றும் மாவீரர்களின் பெற்றோர்களும், உரித்துடையோர்களும் தமிழ்த்தேசிய இனத்தின் மரியாதைக்கும் பேரன்புக்கும் போற்றுதற்கும் உரியவர்களாவார்கள். தமிழீழத் தேசவழமையின் பிரகாரம், இவ்வுறவுகள் முதன்மையுறும் வகையிலே மதிப்பளிக்கப் பெறுதலும் மாவீரர் நாளில் உணர்வுமிக்க சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.

தமிழீழத் தேசியத்தலைவரின் தீர்க்கமான சிந்தனையில் உருவான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஒரு தேசிய நிகழ்வாகவே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மாவீரர்களைத் தந்த பெற்றோர்களே! அவர்தம் குடும்பத்தினர்களே! தாங்கள் வாழும் நாடுகளில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பெற்ற இடத்தில் நடைபெறும் மதிப்பளிப்பு நிகழ்வுகளில்; கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றேம்.

தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் வல்வளைப்புச் செய்து சிதைத்திருந்தாலும் அவர்களின் அடக்குமுறைகளையும் தடைகளையும் தாண்டி, தன்னெழுச்சியால் மேலிடும் உணர்வுகளோடு, தமிழீழத் தாய்மண் பேரெழுச்சிகொண்டு, மாவீரர்களை அகவுணர்வுகளால் சுடரேற்றிப் பூசிப்பதை உலகே உணர்கிறது. தாய்மண்ணிலே வாழும் பெற்றோர்களின் நெஞ்சிற்கு மிக நெருக்கமான இரத்த உறவுகளாகவே பூமிப்பந்தின் திசையெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகள், தாம் வாழும் தேசங்களில் உணர்வெழுச்சியோடு மாவீரர்களை நினைவேந்திடத் தயாராகிவருகின்றார்கள். இப்புனித நாளான நவம்பர் 27இல், மாவீரர்களுக்கு நெய்விளக்கேற்றி வணக்கம்செலுத்தி, தமிழீழம் விடுதலையடையும்வரைத் தொடர்ந்தும் போராடுவோமென உறுதிகொள்வோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.