தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு தொழிநுட்ப உபகரணங்கள் கையளிப்பு

16 0

தேசிய ஐக்கியம் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயற்பாட்டை பலம்மிக்கதாக மேற்கொள்ளும் நோக்கில் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு  தொலைத்தொடர்பு மற்றும் தொழிநுட்ப உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிஜங் ஆகியோரின் தலைமையில் இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிநடத்தலுக்கு அமைய சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனத்தின் ‘ஸ்கோ’ வேலைத்திட்டம் இதற்காக அனுசரணை வழங்கியுள்ளது.

இதன்போது 61 கணனிகள் உள்ளிட்ட தொலை தொடர்புகள் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் கணனி உபகரணங்கள் பகிர்ந்தளிப்பதற்கு தேவையான ஆவணங்கள் பரிமாற்றிக்கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிடுகையில்,

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை உறுதிமிக்கதாக மேற்கொள்வதை நோக்காகக்கொண்டு வழங்கப்படும் ஒத்துழைப்புக்கு அமெரிக்க தூதுவர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆளும் அரசாங்கம் தொடர்பில் பாரிய நம்பிக்கையில் மக்கள் பாரியதொரு மக்கள் ஆணையை வழங்கியுள்ளார்கள். நாங்கள் அந்த மக்கள் ஆணைக்கு அமைய செயற்படும்போது இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை அடிப்படை பொறுப்பாக கருத்தில்கொள்ளப்படும்.

ஆளும் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணைக்கு அமைய ஒருவரை ஒருவர் பிரித்துப்பார்க்கும் காலம் முடிவுக்கு வந்து, அனைவரையும் இலங்கையர்களாக பார்க்கப்படும் காலம் மலர்ந்துள்ளது. இன, மதம் தொடர்பில் ஒவ்வாெருவருக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு அத்தியவசியமான  விடயமாகும்.

சட்டத்தின் ஆட்சியுடன் நாட்டுக்குள் சமாதானம், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு தேசிய ஒருமைப்பாடு பிரதானமானதாகும்.

தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப உபகரணங்களை வழங்குவதன் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டு செயற்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் இலக்குகள் எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்