என்ன நடக்கிறது தஞ்சை தமிழ் பல்கலை.யில்? – துணைவேந்தர் பணியிடை நீக்கத்தின் பரபர பின்னணி

16 0

பணி ஓய்வுக்கு 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் திடீரென பணி நீக்கம் செய்திருப்பது அறிவுஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி சர்ச்​சையில் சிக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்​தில், 2017-2018ம் ஆண்டு​களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்​களில் 40 பேரை அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் நியமித்​தார்.

இவர்களில் பலருக்கும் உரிய கல்வித் தகுதி இல்லை எனவும், இந்த நியமனங்​களில் முறைகேடு நடந்துள்ள​தாகவும் அப்போது சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக, பணி ஓய்வுக்குப் பிறகு துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டது.

இருந்த போதும் 40 பேரும் பணியில் தொடர்ந்​தனர். இதனால், தகுதியற்ற நபர்களை பணியில் அமர்த்தி பல்கலைக்​கழகத்​துக்கு நிதியிழப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்​பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்​றத்தின் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது இதற்கிடை​யில், 2021-ல் வி.திரு​வள்​ளுவன் புதிய துணைவேந்தராக நியமிக்​கப்​பட்​டார்.

இவர், முறைகேடாக நியமனம் செய்யப்​பட்டதாக சொல்லப்​படும் 40 பேரையும் தகுதி கான் பருவம் அடிப்​படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக தெரிகிறது. இது தொடர்பாக திருவள்​ளுவனிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்​பட்டது. ஆனால், திருவள்​ளுவன் முறையான பதிலை அளிக்க​வில்லை என்கிறார்கள். மீண்டும் அக்டோபர் 3-ம் தேதி ஆளுநர் அலுவலகம் விளக்கம் கேட்டு திருவள்​ளுவனுக்கு மெமோ அனுப்​பிய​தாகச் சொல்கிறார்கள்.

இதன் தொடர்ச்​சியாக அக்டோபர் 16-ம் தேதி, ‘விதி​முறைகளை மீறி நியமிக்​கப்​பட்​ட​வர்கள் மீது நடவடிக்கை எடுக்​காமல் கடமை தவறிய உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்​கக்​கூ​டாது?’ என ஆளுநர் தரப்பிலிருந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்​பப்​பட்டது. இதற்கும் துணைவேந்தர் தரப்பிலிருந்து உரிய பதிலளிக்க​வில்லை என தெரிகிறது.

இதனையடுத்து துணைவேந்தர் திருவள்​ளுவனை 20-ம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தர​விட்ட ஆளுநர், ஓய்வு​பெற்ற நீதிபதி ஜெயச்​சந்​திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தர​விட்​டார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய பல்கலை.

ஊழியர்கள் சிலர், “எதற்காக தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்​கப்​பட்டதோ, அந்த நோக்கத்​திலிருந்து இப்பல்​கலைக் கழகத்தின் செயல்​பாடுகள் விலகிச் சென்று​விட்டது. குறிப்பாக, இங்கு பணியாற்று​பவர்​களில் சிலர் சங்கங்​களின் பெயரால் செயல்​படு​வதால் கல்வி போதிக்கும் பணிகள் பெரிதும் பாதிக்​கப்​படு​கிறது” என்றார்கள்.

பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் நெடுஞ்​செழியன் நம்மிடம், “தகுதியற்ற 40 பேர் நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கும், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கும் இன்னும் முடிய​வில்லை. அப்படி இருக்கையில் 40 பேர் நியமனத்தை ரெகுலரைஸ் செய்வதற்கான நடவடிக்கையில் துணைவேந்தர் ஈடுபட்​டுள்​ளார்.

முறைகேடாக நியமனம் பெற்றவர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்​காமல் அவர்களுக்கு ஆதரவாக இருந்​த​தால், தமிழக ஆளுநர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்” என்றார். இதுகுறித்து இடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் திருவள்​ளுவனிடம் விளக்கம் பெற அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவரது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது.