மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம் – இரு மீனவர்கள் படுகாயம்!

13 0
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது.

இந்த வெடிப்பில் இரண்டு மீனவர்களும்  படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரு மீனவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இந்த மீனவர்கள் மன்னார் மாவட்ட  பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதேசத்தில்  மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட  டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மீனவர்கள் இருவரும் டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோது இந்த வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.