கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி மாற்றியிருப்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்.
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக, சட்ட ஆலோசகர்களுடன் முதல்வர் ஆலோசித்து, உரிய முடிவை மேற்கொள்வார். சிபிசிஐடி விசாரணையே போதும் என நிரூபிக்கும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளதால், மேல்முறையீட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விஷச்சாராயத்தை தடுக்க தவறியதாக சில அலுவலர்கள் இடமாற்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்களுக்கு பணி வழங்கிதான் ஆக வேண்டும் என்பதுதான் விதி.
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா, வேண்டாமா என்பதை அரசு வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களுக்கு அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?
மத்திய அரசின் 3 சட்டங்களை எதிர்த்து, சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டற்காக என்னை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வி.பி.துரைசாமி தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசை எதிர்த்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறுவது தவறு. 2016 பேரவைத் தேர்தலில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என வாக்குறுதி தந்த திமுகவை மக்கள் ஆதரிக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் மதுவிலக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.