தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உறுதி செய்தது.
நீதிபதி பி. குமரன் ரத்னம் அவர்களின் ஒப்புதலுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்தமை மற்றும் ஒருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜுலம்பிட்டிய அமரே தன்னை விடுவிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். மேல் நீதிமன்ற விசாரணையில் பிரதிவாதி சமர்பித்த சாட்சியங்களை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை என அந்த மேன்முறையீட்டில் பிரதிவாதி குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட மரண தண்டனையில் தமது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தனர்.
இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதிசெய்யப்படுவதாகவும், அது தொடர்பான மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது.