பதவி விலகும் முன் அதிரடி! – பைடன் கொடுத்த அனுமதியால் அடுத்து என்ன செய்யும் உக்ரைன்?

24 0

தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பைடனின் அமெரிக்க அதிபர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு காட்டியுள்ள இந்தப் பச்சைக் கொடி ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் உலகளவில் அச்சத்தைக் கடத்தியுள்ளது.

ஒருவேளை உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தினால் அது ரஷ்யா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தும். அப்படி ஏவப்பட்டால், 1000 நாட்களுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் முதன்முறையாக எல்லைப் பகுதிகளைக் கடந்து ரஷ்ய பிராந்தியங்களுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அமையும். இதன் மூலம் போர் மேலும் தீவிரமடையும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை ஆவேசப்படுத்தியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது அமெரிக்கா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. பலதரப்பு நிபுணர்கள் தெரிவித்துவந்த மூன்றாம் உலகப் போர் அச்சம் உண்மையாக வாய்ப்புகள் உருவாகும் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தப் போரில் அதன் நேரடி தலையீட்டை வெளிப்படுத்துகிறது.” என்று கூறியுள்ளார். உக்ரைன் பின்னணியில் அமெரிக்காவின் நேரடி தலையீடு இருப்பதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் புதின் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அதே கருத்தை வலியுறுத்தும் வகையில் செய்தித் தொடர்பாளரும் பேசியுள்ளார்.

ட்ரம்ப் மகன் கருத்து.. பைடனின் இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை. இருப்பினும் ட்ரம்பின் மூத்த மகன், “உலகில் அமைதியை உருவாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் எனது தந்தைக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு தற்போதைய ராணுவம் மூன்றாம் உலகப் போரை நடத்துவதை உறுதி செய்ய விரும்புவதாகத் தெரிகிறது” என்று ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

“நான் அமெரிக்க அதிபரானால் 24 மணி நேரத்தில் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்.” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார். அதிபராக தேர்வான பின்னர் ஜெலன்ஸ்கியுடன் அவர் தொலைபேசியிலும் உரையாடினார். இதனால் உக்ரைன் போர் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் உருவான நிலையில் தற்போது போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.

1000 நாட்களைக் கடந்து.. ரஷ்யா – உக்ரைன் போர் 1,000 நாட்களைக் கடந்து தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்” என்று யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அண்மையில் கூட உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மற்றும் மின் பகிர்வு மையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

ஏன் இந்த அனுமதி? – கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று தெரிந்தே அமெரிக்கா உக்ரைனுக்கு இந்த அனுமதியை வழங்கக் காரணம் இருக்கிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் வட கொரிய துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டில் இந்தப் பகுதியை உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன.

இந்நிலையில் உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யா படைக்குவிப்புகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி அமெரிக்கா, பிரிட்டனை ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் உக்ரைன் ஆக்கிரமித்துள்ள கர்ஸ்க் பகுதியிலிருந்து ரஷ்ய படைகளை விரட்டியடிக்க மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு காட்டத் தொடங்கியுள்ளன. அதன் விளைவாகவே அமெரிக்கா இந்த அனுமதியை உக்ரைனுக்கு அளித்திருப்பதாகத் தெரிகிறது.

ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் வட கொரிய வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ராணுவ தளவாட உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா, உக்ரைன், தென் கொரியா குற்றஞ்சாட்டி வருகிறது இங்கே குறிப்பிடத்தக்கது.