நீர்வளத்துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிக்கு 147 பொறியாளர்களை கொண்ட அவசரகால வெள்ள மீட்பு குழு

12 0

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாதத்தில் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழிந்துள்ளது. இந்த நிலையில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசரகால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படும். அந்த அடிப்படையில், நீர்வளத் துறையிலும் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நீர்வளத் துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள். இக்குழுவினர் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி, இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடத்துக்கு நேரடியாக சென்று அப்பகுதியில் நீர்வளத்துறை அதிகாரியுடன் இணைந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இக்குழுவினர் வழங்குவார்கள்.

பாசன கட்டமைப்பு மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பாதிக்காத வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் வெள்ள பாதிப்பு இடத்துக்குச் செல்லும் நாட்கள் அவர்கள் தலைமையகத்தில் பணியில் இல்லாவிட்டாலும் அது அவர்கள் பணியில் உள்ள நாட்களாகவே கருதப்படும் என்று நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.