எல்ஐசி இணையதளம் இந்திக்கு மாற்றம்; இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை நசுக்கும் செயல்: தலைவர்கள் கண்டனம்

13 0

‘எல்ஐசி நிறுவனத்தின் இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது, இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை நசுக்கும் செயல்’ என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் இணையதள முகப்பு நேற்று காலை இந்தி மொழியில் மாற்றப்பட்டது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருந்ததால், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் காப்பீடு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும்கூட இந்தியில்தான் உள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான மொழித் திணிப்பேயன்றி வேறல்ல. இந்தியர்கள் அனைவரின் ஆதரவோடும் வளர்ந்ததுதான் எல்ஐசி. அத்தகைய நிறுவனம் தனது வளர்ச்சிக்கு பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி வஞ்சிக்கத் துணியலாமா? உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்தி பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்றவேண்டும்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்ஐசியின் இணையதளம் இந்திமயமாக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக்கூட இந்தியில் வைத்திருப்பதன் மூலம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தை காணமுடியும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒற்றைத் தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையைப் பாதிக்கும். அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்துக்கே மாற்ற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்ஐசியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்ஐசி இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. வானொலி, தொலைக்காட்சிகளில் இந்தி மயம். இப்போது எல்ஐசி இணையதளத்தையும் முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது. இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு செய்யும் பச்சை துரோகமாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எல்ஐசி இணையதளத்தில் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. குழப்பத்துக்கு இடம் கொடுக்காத வகையில் ஆங்கிலமும், இந்தியும் வழக்கமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. கடிதம்: இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கனிமொழி எம்.பி எழுதிய கடிதத்தில், ‘‘எல்ஐசி நிறுவனத்தின் இணையதளம் இந்தியை இயல்பு மொழியாக மாற்றியிருக்கிறது. ஆங்கில மொழியில் மாற்ற முயற்சித்தாலும்கூட அது தொடர்ந்து இந்தி மொழியிலே இயங்குவதாக பல பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். பன்மொழித்தன்மை கொண்ட நமது நாட்டில் பொது சேவை தளங்கள் அனைத்து மக்களும் பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

எல்ஐசி விளக்கம்: இதற்கிடையே இணையதளத்தின் மொழிமாற்றம் குறித்து எல்ஐசி நிறுவனம் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பாக எல்ஐசி வெளியிட்ட பதிவில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளத்தின் மொழிப்பகுதி பக்கம் சரியாக செயல்படாமல் இருந்தது. இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டு இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரியாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சினையால் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.