ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய தேர்தல் ஆணைக்குழுவினால் அவரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்டு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. அக்கட்சியின் தேசிய பட்டியலில் அதன் தவிசாளர் இம்தியாஸ் பாகீர் மாக்கார், முன்னாள் எம்.பி.க்களான டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க, ஜீ.எல்.பீரிஸ், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரது பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இவர்களில் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஆசனங்களில் இம்தியாஸ் பாகீர் மாக்கார் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை தேசிய பட்டியலில் உள்வாங்கக் கூடாது என்பதை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை நியமிக்கப்படுபவர்கள் மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதிலும் ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.