வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை புறக்கணித்து தே.ம.சக்திக்கு ஆதரவளித்துள்ளமை வரவேற்கத்தக்கது

19 0

வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

புதிய ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும். அரசியலில் இருந்து முழுமையாக விலகவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு  திங்கட்கிழமை (18)  முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்கள். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

வடக்கு மக்கள் இனவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம்  மற்றும் சிங்கள சமூகத்தின் நலனுக்காக அரசாங்கம் செயற்பட வேண்டும்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் டயஸ்போராக்களின் தேவைக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

அரசியலில் இருந்து முழுமையாக விலகவில்லை. தனிப்பட்ட காரணிகளினால் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நாட்டின் நலனை கருத்திற் கொண்டே என்றும் செயற்படுவேன் என்றார்.