ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்கள்: இதுவரை 659 குழந்தைகள் பலி, காயம் 1,747 என யுனிசெஃப் தகவல்

17 0

ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது கண்மூடித் தனமாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் தொடங்கி உலக நாடுகள் வரை பலரும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா அதையெல்லாம் காதில்கூட போட்டுக் கொள்ளாமல் தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த நிலையில், உலக நாடுகளே இந்தியாவைதான் போரை நிறுத்த உதவிக்கு நாடினர். குறிப்பாக, ”இந்திய பிரதமர் மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வந்தார். ஆனால், இந்தியாவோ நடுநிலையாகவே செயல்பட்டு வந்தது. இந்தச் சூழலில், டொனால்டு ட்ரம்ப் ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று கூட 120 ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தகைய தாக்குதலால் அனல் மின் நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது.

தற்போது, யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில், இதுவரை 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கோடிக்கணக்கான குழந்தைகள் தொடர்ச்சியான தாக்குதல்களால் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். உணவு, மின்சாரம், குடிநீர் மற்றும் பிற தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலையில் இருந்து உக்ரைனில் தாக்குதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளது’ என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுகையில், “அதிகப்படியான குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கக் கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். குழந்தைகள் தங்கள் படுக்கைகளில், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இளம் உயிர்கள் பலியானது அவர்களின் குடும்பங்களுக்கு மிகப் பெரிய வலியை ஏற்படுத்தும். மேலும், பல குழந்தைகள் பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இது போன்ற விஷயங்கள் அவர்களின் உளவியலை பாதிக்கும்.

கடந்த 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் வெறும் கற்கலால் மட்டுமே ஆன கட்டிடங்கள் அல்ல; அவை குழந்தைகளின் நம்பிக்கைக்கான உயிர்நாடிகள். இந்தப் போரின் பயங்கரங்களில் இருந்து இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உக்ரைனில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை இனி மேலும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.