ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமேதாச முறையாக நிர்வகிக்காததன் காரணமாகவே இன்று அந்த கட்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமின்றி எதிர்க்கட்சி தலைவராகவும் சஜித் பிரேமதாச உரிய முறையில் செயற்படவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் காணப்பட்ட பலவீனத்தின் காரணமாகவே நான் அக்கட்சியிலிருந்து விலகினேன். அதே போன்று மேலும் பல சிரேஷ்ட உறுப்பினர்களும் கட்சியை விட்டுச் சென்றனர். அவர் வகித்த இரு பதவிகளிலும் முறையான நிர்வாகத்தில் ஈடுபடவில்லை.
எனவே அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் ஹர்ஷ டி சில்வாவை தலைவராக தெரிவு செய்வதிலும் தவறில்லை. சஜித் பிரேமதாசவின் தலைமையில் இவர்களால் பலமானதொரு எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது.
மாற்று வழியொன்று இல்லாததன் காரணமாகவே மக்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்தவர்கள் கூட இம்முறை தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். இனியாவது ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியான அதன் பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.