பொதுத் தேர்தலில் சிறுபான்மை மற்றும் பெண் வேட்பாளர்களின் இருப்பு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இதில் ஒதுக்கப்பட்ட தமிழ் தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகளும் அடங்கும். இந்த ஆதாயங்கள் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடும் சிறுபான்மையினரின் திறனை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு இலங்கையின் பொதுத் தேர்தலில் முன்னெடுத்த கண்காணிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் அதன் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஜனநாயகத்துக்கான இலங்கை மக்களின் வலுவான அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டுகிறது. இது 2024 பாராளுமன்றத் தேர்தலில் அவர்களின் பங்கேற்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 17 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுடன், 160 தேர்தல் தொகுதிகளில், 13 421 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 22 தேர்தல் மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பொருளாதார மீட்சி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டிருந்த பொதுத் தேர்தலில் 225 ஆசனங்களுக்காக சுமார் 8000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பான தனது தேர்தல் கண்காணிப்பு பணிக்காக 30 கண்காணிப்பாளர்களைக் கொண்ட குழுவை நியமித்தது.
அந்தக் குழுவில் இரண்டு தேர்தல் ஆய்வாளர்கள், 13 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் ஒக்டோபர் 31 முதல் மற்றும் 10 குறுகிய கால கண்காணிப்பாளர்கள் நவம்பர் 11 முதல் பிரச்சார நடவடிக்கைகள் உட்பட, தேர்தல் செயல்முறையின் முக்கிய கட்டங்களை கண்காணித்திருந்தனர். வாக்காளர் கல்வி, ஊடகக் கண்காணிப்பு, நிர்வாக ஏற்பாடுகள், தேர்தல் நாள் செயல்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் 22 மாவட்டங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய முன்னேற்றங்கள் என்பவையும் இக்குழுவால் கண்காணிக்கப்பட்டன.
புதிய பிரச்சார நிதிச் சட்டம், அதன் அறிமுகத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இம்முறை தேர்தலிலும் செயற்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த பிரச்சாரச் செலவைக் குறைத்தது மற்றும் போட்டித்தன்மையை அதிகரித்தது. இருப்பினும், இது குறைவான பிரச்சார நடவடிக்கைகளுக்கும் கூட வழிவகுத்தது. குறைந்த வாக்குப்பதிவுக்கு இதனை ஒரு காரணியாகக் குறிப்பிடலாம்.
பிரசாரக் காலத்தில், ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில், அரச வளங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது இனி தேர்தல்களின் நிலையின் ஒரு பகுதியாக மாறாது என்பதை உறுதிசெய்ய சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்காலத்தில் மோசமான செயல்களை தடுக்கும் வகையில் கடந்த கால குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்த வேண்டும்.
பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சமூக ஊடகங்களின் விரிவான பயன்பாடு அவதானிக்கப்பட்டது. இவற்றில் தவறான தகவல்களைத் தடுக்க தேர்தல் ஆணைக்குழு முயற்சித்த போதிலும், குறைவான ஆதாரங்கள் காரணமாக சவால்கள் நீடித்தன. தவறான பொருளாதார விவரிப்புகள், வெறுப்பு பேச்சு மற்றும் பாலின அடிப்படையிலான துன்புறுத்தல்கள் பெருக இது அனுமதித்தது. அது மாத்திரமின்றி பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
சமூக ஊடகங்களை நோக்கி கணிசமான மாற்றம் இருந்தபோதிலும், இந்தத் தேர்தல்களில் பாரம்பரிய ஊடகங்கள் இன்னும் பெரிய பங்கைக் கொண்டிருந்தன. நீண்ட காலத்திற்கு, தேர்தல் காலத்தில் ஒவ்வொரு வேட்பாளரையும் அல்லது கட்சியையும் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட வேண்டிய நேரம் ஆகியவற்றில் வரம்புகளை இயற்றுவதற்கு பிரச்சார நிதிச் சட்டத்தில் ஏற்பாடுகளை உள்ளடக்கியதை பாராளுமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
52 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களாக பெண்கள் இருந்தபோதிலும், 15 சதவீத வேட்பாளர்கள் மட்டுமே பெண்களாக இருந்தனர். இது தொடர்ச்சியான கலாச்சார மற்றும் பாலின சார்புகளை பிரதிபலிக்கிறது. எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது, 21 பெண்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த தேர்தல்களில், அரசியலில் பெண்களின் கலாச்சார உணர்வை மாற்றுவதற்கும், பெண் வேட்பாளர்களுக்கு மிகவும் சாதகமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் தேர்தல் ஆணைக்குழு மிகவும் முனைப்பான பங்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே அடிப்படை வாக்களிப்பு நடைமுறைகளை புரிந்து கொள்ளும் வீதம் குறைவாகக் காணப்பட்டது. எனவே அடுத்த தேர்தலில், மாற்றுத்திறனாளிகள், இன சிறுபான்மையினர், முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் உட்பட பல்வேறு வாக்காளர் குழுக்களின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான வாக்காளர் கல்வி திட்டங்களை தேர்தல் ஆணைக்குழு உருவாக்க வேண்டும்.
மேலும் தேர்தல் ஆணைக்குழுவானது பார்வை மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள வாக்காளர்களை தொட்டுணரக்கூடிய வாக்குச்சீட்டுகள் மற்றும் சைகை மொழி பயிற்சி மூலம் அணுகுவதில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தெளிவாக இல்லை. பல வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை தொடர்கிறது. இது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவதை உறுதி செய்வதற்கான உடனடி தீர்வுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
கைதிகள், வெளிநாட்டுப் பிரஜைகள், பெண் பௌத்த பிக்குகள், அத்தியாவசியத் தொழிலாளர்கள், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், மருத்துவமனை நோயாளிகள் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட தனிநபர்கள் உட்பட பல தகுதியான வாக்காளர்களுக்குள்ள தடைகள் அடுத்தடுத்த தேர்தல்களில் நீக்கப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, 2024 பாராளுமன்றத் தேர்தல் போட்டித்தன்மை குறைவானதாகவே அமைந்தது. தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. சிறுபான்மை மற்றும் பெண் வேட்பாளர்களின் இருப்பு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இதில் ஒதுக்கப்பட்ட தமிழ் தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகளும் அடங்கும்.
இந்த ஆதாயங்கள் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடும் சிறுபான்மையினரின் திறனை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.