யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்லும் பவானந்தராஜாவுக்கு வாழ்த்து – அமுது செபஸ்ரியான் நேரு

15 0
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜாவுக்கு லண்டனில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் சமூக சேவையாளர் அமுது செபஸ்ரியான் நேரு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் வட பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கும் அவர் பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தேசியக் கட்சி ஒன்றின் சார்பில் அதுவும் இடதுசாரி கட்சியின் சார்பில் பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும்.

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு தமிழ் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.

அந்த ஆதரவு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பெருகுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் முக்கியமான காரணமாக அமைந்தார்கள். அவர்களில் இருவர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா. சுகாதாரத்துறை மூலமாக நீண்டகாலம்  சேவைசெய்த அவரை  யாழ்ப்பாண மக்கள் இப்போது பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். அவரது தன்னலமற்ற முன்னைய சுகாதாரத்துறைச் சேவையே மக்கள் அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமாரவின் வெற்றி தென்னிலங்கையில் ஒரு வரலாற்று முக்கியத்துவ அரசியல் மாற்றத்தை குறித்து நின்றது. அந்த மாற்றம் வட பகுதியில் தமிழ் மக்களுக்கும் பயன்தரக்கூடிய மாற்றம் அல்ல என்று தமிழ் கட்சிகள் கூறிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் அந்த மாற்றத்தின் மூலமாக தமிழ் மககளும் பயன் பெறுவதற்கு வழி செய்யும் ஒரு மார்க்கம். ஆகவே பவானந்தராஜா பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தீர்மானித்தார். அந்த தீர்மானத்தை யாழ்ப்பாண மாவட்ட மக்களும் வரவேற்று ஆதரித்து அவரை கணிசமான வாக்குகளுடன் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தில் இன்னமும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது வாழ்க்கையில் வழமை நிலைக்க திரும்ப முடியாமல் இருக்கிறார்கள்.

அந்த மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் கட்டியெழுப்புவதற்கான தொழில்  வாய்ப்பகளையும் வழங்குவதற்கு அரசாங்கத்தின் தாராளமான உதவிகளை பெற்றுக் கொடுக்க பவினந்தராஜா பயனுறுதியுடைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

வெறுமனே உணர்ச்ச்சியைக் கிளறும்  அரசியல் கோலோச்சிய ஒரு மண்ணில் சமூக மாற்றத்தை நாடும் மக்களுக்கு நம்பிக்கை நட்டத்திரமாக பவானந்தராஜா விளங்குகிறார். அவர் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின் நல்வாழ்வுக்காக ஆளும் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் பெருமளவு பணிகளை அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கக்கூடிய ஆற்றலுடனும் அறிவுடனும் பவானந்தராஜா இருக்கிறார்.

அவரின் கரங்களை பலப்படுத்துவது யாழ்ப்பாண மக்களின் கடமையாகும். பவானந்தராஜா அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு மக்களின் பெருவாரியான பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு தமிழ் மக்கள் கட்சி அரசியல் மாச்சரியங்களை மறந்து சகல பிரிவினரும் ஒத்துழைக்க வேண்டும்.

வெறுமனே  இனத்துவ  அரசியல் சுலோகங்களை பயன்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் போக்கில் ஒருமாற்றம் தேவைப்படும் இந்த நேரத்தில் தேசிய அரசியலை கூடுதல் பட்சம் தமிழ் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு தாராளமாக  முயற்சிக்க  வேண்டும். அத்தகைய ஒரு ஆரோக்கிரமான பாதையில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இணைந்து  கொள்வதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. அதன் முன்னரங்கத்தில் நிற்கும் பவானந்தராஜாவின் கரங்களைப் பலப்படுத்துவோம் என்று அமுது நேரு தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.