சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

17 0

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறியிருப்பதாவது: சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1,450 தொழிலாளர்களில் இதுவரை 450 பேர் மட்டுமே ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கும் பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்களை மறைமுகமாக நிர்வாகம் அச்சுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை, தொழிற்சங்க சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று பதிவுசான்றிதழ் வழங்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சங்கப் பதிவு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரும் நிர்வாகத்துக்குச் சாதகமாக காலஅவகாசம் கேட்டு வழக்கை நீட்டிக்கச் செய்வது தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் வஞ்சிக்கும் செயலாகும். தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறையை கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தில் தற்போது 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 3,192 பணியிடங்கள் மட்டுமே நியமிப்பது சரியானதல்ல. காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் வேளாண் திட்டங்களுக்கான மின்னணு சர்வேயில் மாணவர்களைப் பயன்படுத்துவதைக் கைவிடவேண்டும். இவ்வாறு தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளன.