திமுக அரசு 3 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அண்ணாமலை, டிடிவி தினகரன் வலியுறுத்தல்

17 0

பல கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளனர்.

அண்ணாமலை: ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெற்று அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றுவதையே முழுநேர பணியாக செய்து வருகிறது திமுக. கடந்த 2023 ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டை சேர்ந்த காலணி நிறுவனம் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக திமுக அரசு அறிவித்தது. அதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தது. ஆனால், 20 மாதங்கள் கடந்தும் கூட அந்த தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை.

அதேபோல, குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்ற முதல்வர் ரூ.6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ரூ.60 கோடி முதலீடுகூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக முதல்வர் பெருமைப்பட்டிருக்கிறார். இதுபோன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்திவிட்டு, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.

டிடிவி தினகரன்: கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொடங்கி சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் செய்தாரே தவிர, அங்கு ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் இன்றுவரை வந்ததாக தெரியவில்லை.

ஊர் ஊராக சென்று ஈர்க்காத முதலீடுகளை ஈர்த்ததாகவும், உருவாக்காத வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் பெருமை பேசி நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயல். கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.