தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு – சர்ச்சையை கிளப்பிய “அமரன்”

19 0

திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று (16) அதிகாலை 3 போத்தல்களில் அடைத்து கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. தியேட்டருக்கு எந்த சேதமும் இல்லை. மேலப்பாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் “அமரன்.”

தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி  எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளது.

தேசிய சுதந்திரத்துக்காக முழங்கப்பட்ட விடுதலை முழக்கமான ஆசாதி கோஷம் என்ற முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்கல் போன்ற அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்ற கோஷம் இராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய கோஷமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்டிபிஐ  கட்சியினர் குற்றஞ்சாட்டி போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்க சுவருக்குள்  மர்ம நபர்கள் பெட்ரோல்  குண்டு வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.