அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக புகார்

59 0

மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடிவழக்குகளை பதிவு செய்தனர். எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை உள்ளது.

இந்த மூல வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அவரை அமலாக்கத் துறை 2023 ஜூன் 14-ல் கைது செய்து சிறையிலடைத்தது. 471 நாள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த செப்டம்பரில் நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொடர்ந்து அவருக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் மீது அதிமுக ஐ.டி. பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று காலை புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தமிழக மின்சார துறையில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதற்கு ரூ.1,182 கோடிமதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின் மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டர் விதிகளை பின்பற்றாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் டெண்டர் விடப்பட்டதே இந்த இழப்புக்கு காரணம். மேலும், 26,300 ட்ரான்ஸ் பார்மர்களை வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில், ஒரே விலைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கும் நிகழ்வும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக, இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த டெண்டரை எடுத்த நிறுவனத்துக்கு ரூ.397 கோடி ரூபாய் லாபம் கிடைக்க உதவியுள்ளனர். ஆகையால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.