ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடன் பேச வேண்டும்: சி.வி.சண்முகத்துக்கு நீதிபதி அறிவுரை

28 0

ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பேசவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்தாண்டு செப்டம்பரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டாஸ்மாக் வருமானத்தை தொடர்புபடுத்தி தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியதாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியினரின் ஜனநாயக கடமை தான் என்றாலும் ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பேச வேண்டும். தேர்தலின்போது வாக்குறுதிகளை கொடுப்பது உலகளவி்ல் உள்ள நடைமுறை தான். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்ணியமான முறையில் சுட்டிக்காட்டி பொறுப்புடன் பேச வேண்டும். அந்தக்காலம் போல இந்தக்காலம் இல்லை. அடுத்த தலைமுறை நாட்டில் என்ன நடக்கிறது என பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் நவ.22-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.