கருணாநிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி

338 0

mutharasanகம்யூனிஸ்ட்கள் மீது கரிசனம் காட்டிய திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக, தமிழகச் சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டுகாலமாக ஒலித்து வந்த கம்யூனிச கொள்கைகளின் வாய்மூடப்பட்டு விட்டதே என்ற கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கைக்கு, “கம்யூனிசக் கொள்கைகள் சட்ட மன்றத்தில் எதிரொலிக்கப் படாமல் இருக்கிறதே என்று நாம் தான் வருத்தப்படுகிறோமே தவிர அந்தக் கட்சியின் தலைவர்கள் வருத்தப்படுவதாக தெரியவில்லை” என பதில் அளித்துள்ளார். நாளேடுகளில் இச்செய்தி வெளிவந்துள்ளது.

 கலைஞர் தனது அறிக்கையின் வாயிலாக பிற கட்சியினரை வம்புக்கு இழுப்பதும் அக்கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் அவரது வாடிக்கையான செயல் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த அனைவரும் உணர்ந்திட்ட ஒன்றே. திராவிட முன்னேற்றக் கழகம் போன்று, கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னிச்சையாகவோ, ஒரு சிலரோ, தலைமை வகிப்பவரின் குடும்பமோ கூடிய எவ்வொரு முடிவையும் மேற்கொள்ள இயலாது என்பதனை கலைஞர் நன்கறிவார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சுயநலன் கொண்டோர்க்கு இடமில்லை என்பதனையும் கலைஞர் நன்கறிவார்.

கம்யூனிஸ்ட்கள் பேரவையில் இடம் பெறாதது குறித்து தற்போது பொதுமக்களும், பத்திரிக்கைகளும் கவலைப்படத்தான் செய்கின்றார்கள். பேரவை விவாதங்களை கண்டு முகம் சுளிக்கின்றார்கள், யாரை எப்படி அழைப்பது என்பதை தான் பேரவையின் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது என வருந்துகிறார்கள், கம்யூனிஸ்ட்கள் அவையில் இருந்தால் மக்கள் பிரச்சனை குறித்து விவாதிப்பார்களே, இன்று அதற்கு வாய்ப்பில்லையே என்று கவலைப் படுவதை புரிந்து கொள்ள முடிகின்றது. மக்களின் கவலைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. கலைஞரின் கவலையையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. கம்யூனிஸ்ட்கள் மீது கரிசனம் காட்டிய கலைஞருக்கு நன்றி!.

தேர்தல் முடிவில் கம்யூனிஸ்டுகள் சட்டமன்றப் பேரவைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மேலோங்கியுள்ளது. எதிர்காலத்தில் மாற்று சக்தியாக அதிகார மையத்தில் கம்யூனிஸ்டுகள் அமர்ந்து பணியாற்ற வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியான நம்பிக்கையோடு கம்யூனிஸ்ட்கள் பணி தொடர்வதை பலவீனப் படுத்தும் முயற்சிகள் எந்த வகையிலும் வெற்றிபெறாது என்பதை கலைஞர் போன்றோர் உணர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.