வேட்புமனு சொத்து விவரம் குறித்த புகார்: கே.சி.வீரமணி நவ.26-ல் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

14 0

சட்டப்பேரவை தேர்தலின்போது சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக எழுந்த புகாரில் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி. வீரமணி மீது வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதாகவும் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்திலும் தொழிலதிபர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்து, குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தேர்தல் அலுவலர் பல்வேறு கோப்புகளை அளித்தார். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் ஜேஎம் 1-ல் நீதிமன்றம் நேற்று முன்தினம் பரிசீலினை செய்து, பிஎன்எஸ்எஸ் பிரிவு 223-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரும் 26-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும் என திருப்பத்தூர் ஜேஎம் 1-வது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.