தேர்தல் காலங்களில் அலையின் பின்னால் செல்வதால் தான் மக்களால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாதுள்ளது. இவ்வாறான தீர்மானங்களால் ஒருபோதும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
அரசியலில் சந்தித்த இழப்புக்கள் எனக்கு கவலையளிக்கவில்லை. ஆனால் மக்களால் இன்னும் சரியான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என்பதே கவலையளிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
வியாழக்கிழமை (13) வாக்களித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. சற்று ஓரமாகியிருக்கின்றேன். திசைக்காட்டியின் அலையில் சிக்கி அவர்களுக்கு புள்ளடியிடும் நிலைப்பாட்டிலேயே மக்கள் இருக்கின்றனர். தவறிழைத்தவர்களை ஓரங்கட்டி, எஞ்சியுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் நிலைப்பாடு தவறானதாகும்.
எஞ்சியிருப்பவர்களின் யார் தகுதியானவர் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து வெளிவருவதற்கு மக்கள் இன்னும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் மக்களுக்கு அந்த யதார்த்தத்தை உணர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அலையின் பின்னால் செல்வதால் தான் மக்களால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாதுள்ளது. இவ்வாறான தீர்மானங்களால் ஒருபோதும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
முன்னாள் இராணுவ தளபதியாக எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் எனது தெளிவுபடுத்தலையடுத்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
மக்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானம் எடுப்பதற்கான உரிமை இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதற்காக அவர்களின் பின்னால் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை.
நான் இதற்கு முன்னர் அவ்வாறு செயற்பட்டதும் இல்லை. சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்களானால் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
அதேவேளை அரசியல் அனுபவம் மிக்கவர்களே பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். பிரதேசசபையில் கூட அங்கத்துவம் வகிக்காதவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டால், நிச்சயம் அது தோல்வியிலேயே நிறைவடையும்.
அரசியலில் சந்தித்த இழப்புக்களுக்காக நான் கவலையடைவில்லை. ஆனால் மக்களால் இன்னும் சரியான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என்பதை எண்ணியே கவலையடைகின்றேன் என்றார்.