சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர மறுத்த அர்ஜுன் சம்பத் மகன் கைது

15 0

கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக வார இதழ் ஒன்றைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி, வார இதழ் ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியதாக திமுகவைச் சேர்ந்த அப்துல் ஜலீல் புகார் அளித்தார். இதன் பேரில் ஓம்கார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மன்னிப்பு கோர காலஅவகாசம் கோரியதால் ஓம்கார் பாலாஜி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தை மதித்து நடப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கோருவதாகவும் கூறி ஓம்கார் பாலாஜி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

ஆனால் நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்புகோருவதாக கூறியதை நிராகரித்து, மனுதாரரின் விருப்பத்தின் பேரில் மன்னிப்பு கேட்பதாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆனால், ஓம்கார் பாலாஜி அதை ஏற்க மறுத்து, எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

சுற்றிவளைத்து கைது… அதையடுத்து நீதிபதி, அவரை கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வரும் 19-க்கு தள்ளிவைத்தார். இதையடுத்து, இரவு 7.10 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.