வாக்களிப்பின்போது இடது கை ஆட்காட்டி விரல் மீது அடையாளம் இடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

18 0

பொதுத்தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு  இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின்  அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளம் இடப்பட்டது. அத்துடன் கடந்த மாதம் 26ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெற்ற  காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளம் இடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3) (ஆ) பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின்போது வாக்களிப்பதை அடையாளப்படும்போது  எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில்  வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு  இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின்  அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.