செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள்: ட்ரம்ப் அறிவிப்பு

11 0

 தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

“மகத்தான எலான் மஸ்க்கும் அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இந்த இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள். இது ‘Save America’-வுக்கு மிகவும் அவசியம். இது நிச்சயம் அரசு நீதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளை தரும். ஜூலை 4, 2026 வரை அவர்கள் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும், வெள்ளை மாளிகை, மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது உற்ற நண்பர் மஸ்க் மற்றும் ஆதரவாளர் விவேக் ராமசாமிக்கு ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புகளை வழங்கி உள்ளார்.