பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் அஜர்பைஜானில் கவனம் ஈர்க்கும் ‘இறந்த திமிங்கல மாதிரி’

51 0

உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29 – COP29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் பாகு கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘இறந்த திமிங்கல மாதிரி’ கவனம் பெற்றுள்ளது. காயங்களில் இறந்து ரத்தம் வழிந்து உறைந்து திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பது போல் மிகத் தத்ரூபமாக இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பூமர் என்பவர் உருவாக்கியுள்ள இந்த திமிங்கல மாதிரி பருவநிலை மாற்றம் திமிங்கல வகை மீன்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கல மாதிரியைக் காண பாகு நகரவாசிகள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.

இதற்கு முன்னதாக இந்த திமிங்கல மாதிரியானது பாரிஸ், ஜூரிச் மற்றும் போர்டோக்ஸிலும் காட்சிப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மாநாட்டின் பிரதான இலக்கு: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்​புக்கான இழப்பீட்டு நிதியில் கார்பன் உமிழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, வளைகுடா நாடுகள் பங்களிக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் வலியுறுத்​தி வருகின்றன. தவிர, இழப்பீடு நிதியை வழங்கு​வதில் வளர்ந்த – வளரும் நாடுகளுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்​படாமல் உள்ளது. இவை குறித்து COP29 மாநாட்டில் விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-ம் பகுதியில் பங்கேற்கும் இந்தியா: இந்த மாநாட்டின் முதல் பகுதியில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் அழைப்பு விடுத்திருந்தார். இதில் 82 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த மாநாட்டின் முதல் பகுதியில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்த மாநாட்டின் 2-ம் பகுதி வரும் 19, 20ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தலைமையில் 19 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்க உள்ளது.