ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் : வாக்குப்பதிவு விறு விறு

16 0
வட இந்திய மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறும் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் பகல் ஒரு மணி வரை 46 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.

வட இந்திய மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

இதில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முதற்கட்ட தேர்தலில் 43 தொகுதிகளுக்கு மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.  இந்திய துடுப்பாட்ட அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி அவரது துணைவியார் சாக்சியுடன் வருகை தந்து வாக்கை பதிவு செய்தார்.

மேலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி வரை 46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.

மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதியன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நவம்பர் 23 ஆம் திகதியன்று நடைபெறும். அன்று மாலையில் முடிவுகள் தெரிய வரும்.

தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வதேரா முதன்முறையாக கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. மதியம் ஒரு மணி வரை இத்தொகுதியில் 40. 67 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.