களுத்துறை மாவட்டம் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தவணை பரீட்சையில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொது அறிவு பரீட்சை வினாத்தாள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முறையான விசாரணைகளின் பின்னர்; உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
களுத்துறை மாவட்டம் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தவணை பரீட்சையில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொது அறிவு பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விடயம் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி, விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பரீட்சை வினாத்தாள் உரியப் பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் கல்வி அமைச்சுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ எவ்வித தொடர்பும் கிடையாது எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முறையான விசாரணைகளின் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.