ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரான முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சுனில்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இ்ந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை பட்டியலிடப்படாத நிலையில் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதி வி. பவானி சுப்பராயன் முன்பாக முறையீடு செய்யப்பட்டது.அதற்கு நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிவிக்கும்படி கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில் உடனடியாக விசாரிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், குறுக்கிட்ட நீதிபதி, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நபர் தகுதியில்லாத நபராக இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும். அரசின் கொள்கை முடிவு சார்ந்த இந்த விசயத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என கேள்வி எழுப்பினார். பின்னர் அனைத்து விசயங்களுக்கும் அரசியல் சாயம் பூசக்கூடாது எனக் கருத்து தெரிவித்து பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறினார்.