நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்: ஜேர்மன் தலைவர் அறிவிப்பு

11 0

ஜேர்மனியில் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, அரசியலில் குழப்பமாக ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

ஜேர்மனியில், SPD, The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகள் இணைந்தே கூட்டணி ஆட்சி அமைத்தன.

இந்நிலையில், கூட்டணிகளுக்குள் கொள்கை கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. ஜேர்மன் அரசில் FDP கட்சியைச் சேர்ந்தவரான Christian Lindner நிதி அமைச்சராக பொறுப்பு வகித்துவந்த நிலையில், அவருக்கும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, திடீரென Christian Lindnerஐ அவரது பதவியிலிருந்து நீக்கினார் சேன்ஸலர்.

அதைத் தொடர்ந்து, FDP கட்சி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது, அதனால், ஆளும் கூட்டணி உடைந்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்

அதைத்தொடர்ந்து, தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார் ஷோல்ஸ். ஜனவரி மாதம் 15ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருந்தார் அவர்.

ஆனால், ஷோல்ஸ் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்: ஜேர்மன் தலைவர் அறிவிப்பு | Ready To Face A No Confidence Motion

அனைவரும் சம்மதிக்கும்பட்சத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ள ஷோல்ஸ், நான் எனது பதவியுடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

விடயம் என்னவென்றால், வழக்கமாக ஜேர்மனியில் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோல்ஸ் தோல்வியடைந்தால், இம்முறை முன்கூட்டியே, அதாவது, மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.