சமூக வலைத்தளங்களை தேர்தல் காலங்களில் முறையாக பாவியுங்கள் – கபே அமைப்பு

10 0

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கபே அமைப்பின் “அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம்” எனும் தொனிப்பொருளில்  கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை குழுக்கள்,  ஊடகவியலாளர்கள், பொதுமக்களை  தெளிவூட்டும் நிகழ்வும் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று (11) கல்முனை பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும்போது வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகிறது.

அதாவது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம். அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம்.

அதேபோல இந்த பொதுத் தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை. இதேவேளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகிறது. இவற்றை நாம் கண்காணிக்கும்போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய, இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகிறது. இது தவிர கடந்த கால தேர்தலில் காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை கபே அமைப்புக்கு  பல்வேறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுவது தொடர்பாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரச்சாரங்களும் வீடியோக்களாக போலி முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஊடாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகம் ஏற்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்திய பிரமாணம் ஒன்றை பெறுகின்றோம்.

எனவே, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும்.

வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும்  ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என கபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இருந்தபோதும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்வது…. இதுவரை காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபட்டு வந்தீர்களோ அதேபோன்று தேர்தல் தினத்திலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்குப் பின்னரான காலப்பகுதிக்குள்ளும் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

இந்த கலந்துரையாடலில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீனுடன் கபே அமைப்பின் சட்டத்துறை பொறுப்பாளர் சட்டத்தரணி ஹரீன்தெர வனகள, மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் ஆகியோர் இணைந்திருந்தனர்.