வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க யாழ். மாநகர சபை கவனம்

8 0

வீதியில் குப்பை கொட்டுபவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் யாழ்ப்பாணம் மாநகர சபை கவனம் செலுத்தி வருகிறது.

ஓட்டுமடம் சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்லும் வீதியில் விலங்குக் கழிவுகள் ஆங்காங்கே காணப்படுவதோடு, வைத்தியசாலை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பனவும் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் அந்த பகுதியில்  துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்கு நாய்கள் அவ்விடத்துக்குச் செல்வதனால் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இதைப் பற்றி பல தடவை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், CCTV கமராக்கள் மூலம் 24 மணிநேரமும் அப்பகுதியை கண்காணிப்பதற்கும், வீதியில் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபை தயாராகியுள்ளது.

அத்துடன், அப்பகுதியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள மீள்சுழற்சி நிலையத்துக்கு சென்று குப்பை பொதிகளை கொடுக்க முடியும் என்ற அறிவித்தலையும் மாநகர சபை வீதிகளில் காட்சிப்படுத்தியுள்ளது.