பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையை வழங்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி அன்று தெரிவித்தது!

20 0

பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி அன்று எதிர்ப்பு தெரிவித்தது. பெருந்தோட்ட மக்களிடம் வாக்கு கேட்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  தற்போதாவது அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவி்த்திருந்தார். அதனை செய்தால் நாங்களும் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று கொட்டகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில்  களமிறங்கி இருக்கும் வேட்பாளர்களின் முதலாவது கூட்டத்திலேயே நான் இன்று கலந்துகொண்டுள்ளேன்.

எமது வேட்பாளர்கள் அதிகமான மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

1947 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும். ஐக்கிய தேசிய கட்சியின் யானைக்கும்  இந்த பிரதேச மக்களுக்கும் இடையில் பாரிய தொடர்பு இருக்கிறது.

இந்த பிரதேச மக்களுக்கு வாழ்வதற்கான வசதிகளை வழங்குவதுடன் 1986இல் சிறிமா, சாஸ்திரி மற்றும் சிறிமா , இந்திரா ஆகிய இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவில் அல்லது இலங்கையில் பிரஜா உரிமை கிடைக்காத அனைவருக்கும் நாங்கள் இலங்கை பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

தொண்டமான் ஐயா எடுத்த இந்த நடவடிக்கையும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அதற்கு வழங்கிய ஒத்துழைப்புடன் நாங்கள் அனைவரும் அதற்கு சம்மதம் வழங்கினோம்

ஐக்கிய தேசிய கட்சி முன்வந்து பெருந்தோட்ட மக்களுக்கு அன்று பிரஜா உரிமையை வழங்கும்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ராேஹண விஜேவீர அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்காக மக்கள் விடுதலை முன்னணி இந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவிக்கிறேன்.

பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையை வழங்க வேண்டாம்  என மக்கள் விடுதலை முன்னணி அன்று  தெரிவித்தது. அப்படியென்றால் ஏன் அவர்களுக்கு இன்று நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்கிறேன்.

மேலும் 2001இல் ஆறுமுகன் தொண்டமான் எங்களுடன் இருக்கும்போது இந்திய பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டு இலங்கையில் இருந்தவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் இந்தியாவுக்கு செல்ல முடியாது இலங்கையில்தான் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது மீண்டும் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கினோம்.இவை அனைத்தும் யானையின் காலத்திலேயே வழங்கப்பட்டது.

கொட்டகலை எந்த அபிவிருத்தியும் இல்லாமல் இருந்தது. தற்போது தனியான பிரதேச சபை, பிரதேச செயலகம் என பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.

யானைக்கு வாக்களித்தால் அந்த அபிவிருத்திகள் கிடைக்கும். அதனால் இந்தமுறை யானைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றவுடன் அவர் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றத்தை கலைக்கும்போது ஏன் கலைக்கிறோம்.

அவரின் வேலைத்திட்டம் என்ன என எதுவும் தெரிவிப்பதில்லை. ஆனால் என்னிடம் 16 குடைகள் இருப்பதாகவும் வேறு விடயங்கள் தொடர்பாகவும் தெரிவிக்கிறார்.

அதேநேரம் ஊடகங்களை எச்சரிக்கிறார். பாராளுமன்றத்தை சுத்தப்படுத்த வாக்களிக்குமாறு மாத்திரமே அவர் கேட்கிறார்.

திசைகாட்டியில் வாக்களிப்பது யாருக்கு? அவர்களின் வேட்பாளர்கள் யார் என்று மக்களுக்கு தெரியாது. அவ்வாறு இருக்கும்போது, அறிமுகம் இல்லாதவர்களுக்கு எப்படி வாக்களிப்பது? இதுவா ஜனநாயகம்? எங்களது கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளில் மக்களுக்கு அறிமுகமானவர்களே போட்டியிடுகின்றனர்.

அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.  திருடர்களை பிடிப்பதாக அநுரகுமார தெரிவிக்கிறார். ஆனால் அதற்கு தேவையான சட்டத்தை நாங்கள் பாராளுமன்றத்தில் அனுமதிக்கும்போது திசைகாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த பிரதேசத்தில் அதிகமான மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவில் இருந்து 350 ரூபா அதிகரித்தோம். அவர்கள் 2ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாக தெரிவித்தார்கள். இப்போது 2ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தெரிவிக்கிறோம். அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

அதேபோன்று பெருந்தோட்ட மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு யாரிடமும் தீர்வு இருக்கவில்லை. ஜீவன் தொண்டமானுடன் நாங்கள் கலந்துரையாடி, அரசாங்கத்தின் காணிகளை இவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு தேவையான முறையில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள இடமளித்து, லயன் அறைகள் இருக்கும் இடங்கள் அனைத்தையும் கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தோம். அதனால் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்களே தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம்.

மேலும் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பளம் அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்தோம் அதேபோன்று அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, அதற்கு குழுவொன்றை நியமித்தோம் குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு கட்டங்களாக சம்பள அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். முதற்கட்டமா அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானித்து அதற்கு அமைச்சரவையின் அனுமதியும்பெறப்பட்டது.

ஆனால் தற்போது அநுரகுமார திஸாநாயக்க அந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்கிறார். சம்பள அதிகரிப்பு கோரி புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் சென்று எனக்கு பாேராடுமாறு தெரிவிக்கிறார்.

இவ்வாறா அரச ஊழியர்களை மதிப்பது என கேட்கிறேன். பாராளுமன்றத்துக்கு எங்களது உறுப்பினர்களை அதிகம் அனுப்பினால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக பாராளுமன்றத்தில் போராட நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் 2028இல் மீள கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதற்கு எமது தேசிய உற்பத்தியை நூற்றுக்கு 15வீதமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும். தற்போது எமது தேசிய வருமானம் நூற்றுக்கு 12வீதமாகவே இருக்கிறது.

நாங்கள் உரிய காலத்தில் கடன் செலுத்த முடியாமல்போனால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் இதுவே தற்போதுள்ள பிரச்சினை. இதற்கு தீர்வு என்ன என கேட்டால் ஜனாதிபதியிடம் பதில் இல்லை.

இந்த நாட்டை பாதுகாக்கவோ பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வோம் திசை காட்டியால் முடியாது. அவர்களுக்கு அதனை செய்யவும் தெரியாது.

அதனால் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க அதுதொடர்பில் அறிந்தவர்கள் யானை சின்னத்திலும் சிலிண்டர் சின்னத்திலும் பாேட்டியிடுகின்றனர்.

அவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் முட்டை விலை ஆயிரம் ருபாவுக்கு அதிகரிக்கும் என்றார்.