கொழும்பிலிருந்து புதிய முகமொன்றை பாராளுமன்றுக்கு அனுப்ப எனக்கு வாக்களியுங்கள்

14 0

கொழும்பு மாவட்டத்தில் இருந்து புதிய முகமொன்றை பாராளுமன்றுக்கு அனுப்ப மக்கள் அனைவரும் ஒருமித்த குரலாக வாக்களித்து என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் போட்டியிடும் லயன் மனோ கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மைக் சின்னத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் இலக்கம் 17இல் போட்டியிடும் லயன் மனோ கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையிலேயே லயன் மனோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

லயன் மனோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொழும்பு மாநகர சபையிலே கடந்த 7 வருடங்களாக கொழும்பு 1 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளில் அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்க குறிப்பாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மக்கள் தங்களது கஷ்டங்கள், பிரச்சினைகளை தெரிவிக்கும்போது அவர்களின் அழைப்புக்களை தட்டிக்கழிக்காது அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றேன்.

நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலாக இணைந்து என்னை பாராளுமன்றுக்கு தெரிவு செய்யும் போது நான் எனது மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளேன்.

நவீன யுகத்திற்கு ஏற்ப கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், வீதிகள், போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு மைதானங்கள் உட்பட பல மக்களுக்கான தேவைகளை எதிர்காலத்தில் நேரடியாக களத்துக்கு சென்று அவற்றை  நிறைவேற்றுவேன்.

மக்கள் என்னை பாராளுமன்றுக்கு அனுப்புவார்கள் எனில் நான் மக்களுக்கான பல நன்மையான திட்டங்களை முன்னெடுப்பேன். நான் மாநகர சபையில் இருக்கும்போது இரவு பகல் பாராது மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன்.

கொவிட் காலங்களில் கொவிட் தடுப்பூசிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுத்தேன். கொவிட் காலங்களில் மரணித்தவர்களின் உடல்களுக்கான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நான் முன்னின்று செயற்பட்டேன்.

வாழ்வாதாரம் அற்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் பாடசாலை பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் பல மண்டபங்கள், குடிநீர் தாங்கிகள் பராமரிப்பற்று காணப்படுகின்றன. அவற்றையும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கள் பாவனைக்காக புனரமைப்பு செய்வேன்.

பல விளையாட்டு மைதானங்கள் கொழும்பில் காணப்படும் நிலையில், அவற்றை பயன்படுத்த முடியாது இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

விளையாட்டு மைதானங்களை முன்பதிவு செய்வதிலும் மாபியா காணப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கும் உரிய தரப்புகளுடன் பேசி தீர்வு வழங்குவேன்.

தேர்தல்கள் காலங்களில் தான் அரசியல்வாதிகள் மக்களின் இருப்பிடங்களை நோக்கி வலம் வருவார்கள். ஆனால் ஏனைய நாட்களில் அந்த அரசியல்வாதிகளை சென்று மக்களால் சந்திக்க முடியாது.

அவர்களின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்தால் கூட அவர்களுடன் பேசமுடியாத நிலை காணப்படுகிறது. அவ்வாறான அரசியல்வாதி நான் அல்ல.

எனது தொலைபேசியானது கடந்த 7 வருடங்களாக 24 மணித்தியாலங்களும் மக்கள் சேவைக்காக பாவனையில் இருந்து, மக்களின் துயரங்களை நேரில் சென்று ஆற்றுப்படுத்தியவன் நான்.

எனவே என்னை மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றித்திற்கு அனுப்பினால், மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுக்கு சேவை செய்து ஒரு புதிய முகமாக வரலாறு படைப்பேன். வாக்களிக்கும் மக்களுக்கு நான் எப்போதும் மக்கள் தொண்டனாகவே செயற்படுவேன்.

மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி என்னில் நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நான் பாராளுமன்ற உறுப்பிராக தெரிவாகும் நிலையில், வட கொழும்பில் மக்களுக்கான காரியாலயமொன்றை திறந்து 24 மணி நேரமும் மக்கள் சேவைகளை முன்னெடுப்பேன்.

நான் சேவைகளை செய்வதற்கு அனைத்து மக்களும் மைக் சின்னத்திற்கு வாக்களித்து எனது இலக்கமான 17 க்கு புள்ளடியிட்டு என்னை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.