சுன்னாகம் விபத்து; பொலிஸார் அராஜகம்; விசேட பொலிஸ் குழு விசாரணை – யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்

18 0

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து,  பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (09) வேன் – மோட்டார் சைக்கிள் விபத்தினை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்டவேளை சாரதிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முதலில் வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கியதாகவும், அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினையடுத்து நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக மக்கள் கூடியமையால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10)  யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்  பயணித்த மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினையடுத்து, வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டவேளை, சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து, சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை கேட்டுள்ளனர்.

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதிப் பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கம் செய்த நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில், விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கிறது. அதை அவர்கள் மீற முடியாது. மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மாஅதிபரும் அறிவுறுத்தியுள்ளார்.

நிச்சயமாக பக்கச் சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.