மன்னார் நானாட்டான் பிரதேச மேய்ச்சல் தரை அடாத்தாக ஆக்கிரமிக்கப்படும் விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கம் எச்சரித்துள்ளது.
நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
எனினும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (07) நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தினர்.
குறிப்பாக மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலர் அடாத்தாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறித்தும் முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை குறித்தும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில், இன்றையதினம் (09) சனிக்கிழமை இரு தரப்பினரையும் அழைத்து தீர்வை பெற்றுத் தருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் காலை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்றனர்.
எனினும், எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து திணைக்களங்களையும் அழைத்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
மேலும், குறித்த இடத்தை தான் நேரடியாக வந்து பார்வையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி வரை குறித்த பகுதியில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என அவர் கால்நடை வளர்ப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, எமது கால் நடைகளின் மேய்ச்சல் தரையாக காணப்படும் ‘புல்லறுத்தான் கண்டல்’ பகுதி தெரிவு செய்யப்பட்ட போதும் இதுவரை எமக்கு உரிய முறையில் கையளிக்கப்படவில்லை.
எனவே, குறித்த மேய்ச்சல் தரை எமக்கு வழங்கப்படும் வரை எமது சங்கத்தின் கீழ் பதிவு செய்து கால் நடைகளை வைத்திருக்கும் கால் நடை வளர்ப்பாளர்கள் எவரும் தமது கால் நடைகளை வேறு பிரதேசங்களுக்கு எக்காரணம் கொண்டும் மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல மாட்டோம் என நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மேய்ச்சல் தரைக்கான நிரந்தர தீர்வு அவசரமாக கிடைக்காது விட்டால் பாரியதொரு ஆர்ப்பாட்டம் ஒன்றை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்வோம் எனவும் குறித்த சங்கத்தினர் எழுத்து மூலம் உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.