புதினுடன் விரைவில் பேச்சு: டொனால்டு ட்ரம்ப் உறுதி

42 0

ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேச உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரியில் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ட்ரம்ப், “அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசவில்லை. விரைவில் நாங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவருடன் பேச தயாராக இருக்கிறேன்” என்றார்.ரஷ்யா – உக்ரைன் எல்லை பகுதிகளில் தீவிரமாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எல்லை பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டும் என ட்ரம்ப் அறிவுறுத்தக்கூடும் என்று தெரிகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படாது என்று ட்ரம்ப் தரப்பில் ரஷ்யாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஆயுத உதவி, நிதியுதவி மூலமாகவே தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போரை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் உக்ரைனுக்கான ஆயுத உதவி, நிதியுதவியை குறைப்பார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் உதவி கிடைக்காத சூழலில் உக்ரைன் அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று ட்ரம்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.