நாட்டிலுள்ள இளைஞர்களின் திறன்களை கண்டறிந்து அவற்றை தொழில்துறை மட்டத்திற்கு கொண்டுவந்து புதிய தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளுக்கான களத்தை உருவாக்க முயற்சிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் வில்லத்தரகே தெரிவித்தார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ரணில் வில்லத்தரகே,
இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வேலை வாய்ப்புகளை தேடுவதாகும்.
குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வேலை வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், எம்மவர்கள் தொழில்முறை திறமைகளை கொண்டிருக்காமையானது ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
அதற்குத் தீர்வாக, அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, தொழில் சந்தைக்கு பொருத்தமான வகையில் அவர்களது தொழில்சார் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்த வேண்டும்.
இளைஞர் சமூகம் ஆக்கபூர்வமான யோசனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலை வாய்ப்பைப் பெறவும், தொழில்முனைவோராக தங்கள் எதிர்காலத்தை வெல்வதற்கும் அவர்கள் ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் அவர்களின் தொழில்முறைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் இளைஞர்களிடையே காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு காணலாம். கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து தேசிய கொள்கையை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை முறையான முகாமைத்துவத்தின் ஊடாக ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டார்.
பொருளாதாரம் பற்றிய எதிர்கால முடிவுகள் நிலையான பொருளாதார நிலையை முன்னோக்கிக் கொண்டு செல்லுமா அல்லது பின்னோக்கிக் கொண்டு செல்லுமா என்பதை தீர்மானிக்கின்றன.
ஒரு தொழில்முயற்சியாளர் எனும் வகையில், நமது நாட்டை கட்டியெழுப்பக்கூடிய பொருளாதாரத் திட்டத்துடன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இங்கு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகங்களை விட இலங்கைக்கே உரித்தான வர்த்தக நாமத்தின் கீழ் வெளிநாட்டுச் சந்தையை அணுகுவது மிகவும் முக்கியமானதாகும்.
அதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டி, இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும். அத்தகைய கொள்கையே நாட்டுக்கு தற்போது அவசியமாகும்.
ஏழைகள் அற்ற, பணக்காரர்களை உருவாக்குவதற்காக நாட்டில் பொருளாதாரம், அரசியல், கலாசாரம், கல்வி போன்ற துறைகளில் தரமான மாற்றத்தை அரசியல்வாதி ஏற்படுத்த வேண்டும்.
நாம் தொழில்முயற்சியாளர்களாகவோ அல்லது அரசியல்வாதிகளாகவோ உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்கின்ற போதிலும், எம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் எமது சொந்த மக்கள் வறுமையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்றால் அது ஒரு பிரச்சினையாகும்.
அந்த நிலைமையை மாற்றும் வகையில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக ரணில் வில்லத்தரகே இங்கு சுட்டிக் காட்டினார்.