நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – வாணியம்பாடியில் பரபரப்பு

63 0

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் வடக்கு மாவட்டச்செயலாளர் வாணியம்பாடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது, அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். இதையடுத்து, 2018-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளராக அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேவேந்திரன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் அவர் இன்று மாலை (வியாழன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தேவேந்திரன் கூறும்போது, ‘‘கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்து, திருப்பத்தூர் வடக்கு மாவட்டச்செயலாளராக, பணியாற்றி வந்தேன். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மீதும், சீமான் மீதும் நம்பிக்கை தன்மை இழந்துவிட்டது. யாரிடமும் கூட்டு வைக்கவில்லை. என்றைக்காவது ஒரு நாள், கட்சி வெல்லும் என நம்பிக்கையோடு உழைத்தோம்.

ஆனால், சீமான் தமிழ் தேசியத்தை ஏற்று யாருடனும் சேர்ந்து, பயணிக்க தயாராக இல்லை. நன்றாக படித்த வேட்பாளரை, முன் நிறுத்தினேன். ஆனால் அவரை 20 நாட்கள் கழித்து மாற்றுகிறார்கள். அதைப்பற்றிய தகவல் எனக்கு தெரிவிப்பது இல்லை. இதை கேட்டால் பேச அனுமதிப்பதில்லை. 3 மாதமாக கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் யாரிடமும் கூட்டணி வைப்பதில்லை என சீமான் கூறுகிறார்.

திமுகவினரிடம் கனிமொழியை முதல்வராக்குவீர்களா எனக் கேட்கிறார்? அப்போ, சீமான் காளியம்மாவை முதல்வராக்குவரா? நாம் தமிழர் கட்சியில் மூத்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு இளையோர்களை நியமிக்கிறார்கள். நாங்கள் எப்படி அவர்களுடன் பயணிப்பது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய நான், 7 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கின்றேன். எவ்வளவோ மன உளைச்சல் இருக்கிறது, வலியும் வேதனையும் கடக்கிறோம். தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பலர் இதே வேதனையில் தான் இருக்கின்றனர். மாநில பொறுப்பாளரிடம் என்னுடைய மனக்குமுறலை தெரிவித்தேன். எல்லாம் கடந்து செல்லுங்கள் என அவர் கூறுகிறார்.

சீமானுக்கு தலை வணங்கலாம். ஆனால் தற்போது வந்துள்ள இளையவர்களுக்கு எனது தன்மானத்தை இழக்க மாட்டேன். கட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் கோணலாக இருக்கிறது. சுயநலத்திற்காக கட்சியை நடத்துகிறார்கள். கட்சியின் பொதுச்செயலாளர், துணை பொதுச் செயலாளர் யார் என்று தெரியாது. இப்படிப்பட்ட கட்சியை எப்படி நடத்த முடியும். இனமானம் காக்க வந்தவன் என சீமான் பேசுகிறார்’’ என தேவேந்திரன் கூறிக்கொண்டு இருக்கும்போது, திடீரென இடையில் வந்த நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நிர்வாகிகள் சிலர், “அண்ணன் சீமானை பற்றி அவதூறாக பேசவேண்டாம்” என கூறி தேவேந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அப்பொழுது, வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை செயலாளர் நாகராஜ் என்பவர் தேவேந்திரனை சரமாரியாக தாக்கி நாற்காலியால் அடிக்க முற்பட்டார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், அங்கு மோதல் சம்பவம் தொடர்ந்தது. இது குறித்து தகவல் வந்ததும் வாணியம்பாடி நகர காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது குறித்து காவல் துறையினர் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.


இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி குருதிப் படை பாசறை செயலாளர் நாகராஜ் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் தேவேந்திரன் மீது   புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம், மோதல் நடந்த சம்பவம் வாணியம்பாடியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.