ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் அரசாங்கத்தால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. ஊடக சுதந்திரம் அற்ற நாட்டில் ஜனநாயகம் உள்ளிட்ட எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இது நாட்டின் அழிவுக்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முதற்பிரஜையான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன் முதலாக ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஊடகங்கள் புதிய ஆடை அணிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டது ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.
அது மாத்திரமின்றி துறைக்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத், ஊடகங்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் அதனை குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது நாம் தினந்தோறும் கேட்ட ஒன்றாகும். ஆட்சிக்கு வர முன்னர் தேர்தல் மேடைகளில் ஆற்றிய உரையின் போது, நாம் வந்த பின்னர் சில ஊடக நிறுவனங்களை மூட வேண்டியேற்படும் என்று கூட தெரிவித்தனர்.
தற்போது அந்த அபாயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட வேண்டும் என்கின்றனர். எதிர்க்கட்சி கூட தேவையில்லை என்கின்றனர்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்தை அடக்குவதற்கு அரசாங்கம் முனைகின்றது. தேர்தலுக்கு முன் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பதாகக் கூறியவர்கள் தற்போது அவற்றை அச்சுறுத்துவது ஒழுக்கமானதல்ல.
இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் இவற்றை எதிர்பார்க்கவில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டவர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆவார். ஆனால் அவர் ஒருபோதும் அவற்றின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க வேண்டும் என்றோ அல்லது அவற்றின் மீது அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை.
ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் இந்த அரசாங்கத்தால் முன்னோக்கிப் பயனிக்க முடியாது. ஊடக சுதந்திரம் அற்ற நாட்டில் ஜனநாயகம் உள்ளிட்ட எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இது நாட்டின் அழிவுக்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம் என்றார்.