மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினர் பொலிஸில் முறைப்பாடு

24 0

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்ட கால பிரச்சினையாக மேய்ச்சல் தரை காணப்படுகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்த போதும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அடாத்தாக விவசாயம் செய்து வருகின்றமை குறித்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமது பிரச்சினையை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை (6) மாலை நானாட்டான் பிரதேச  கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகளுக்கும்,மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

பின்னர் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் குறித்த பிரச்சினை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம்  மாலை நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகள் ,மெசிடோ நிறுவன பிரதி  நிதிகளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடினர்.

குறிப்பாக மேய்ச்சல் தரை காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலர் அடாத்தாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறித்தும், முருங்கன் பொலிஸார் தமது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை குறித்தும்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த பிரச்சினை குறித்து இரு தரப்பினரையும் அழைத்து தீர்வை பெற்றுத் தருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கட்டுக்கரை புல்லறுத்தான் குளம் பகுதியில் 352 ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரவையாக வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.