அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி

5 0

அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார். அப்பகுதியிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி ஆவார். இவரது பெற்றொர்கள் பெங்களூருவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.ஏற்கெனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியினர்களான ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்ரீ தானேதர் கர்நாடக மாநிலம் பெலகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். மிக்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் 39,385 வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்க்ஸை தோற்கடித்துள்ளார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் பிறந்தவர். இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட்ட அவர், 1.27 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்க் ரைஸை தோற்கடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ரோ கண்ணா கலிபோர்னியா-17 தொகுதியிலும், சென்னையில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவரான பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் -17 தொகுதியிலும், குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமி பெரா, கலிபோர்னியா 6- தொகுதியிலும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வென்றுள்ளனர்.